பெருங்காயத்தூள் தயாரிப்பு மற்றும் விற்பனைக்கு தேவையான படிகள்

    சிறு தொழில்:

  பெருங்காயத்தூள்: ஒரு அறிமுகம்

     பெருங்காயம் என்பது 'ஃபெருலா அசஃபோடிடா' என்ற (Ferula assa-foetida) என்ற தாவரத்தின் வேரிலிருந்து எடுக்கப்படும் ஒரு பிசின் ஆகும். இதன் தனித்துவமான மணம் மற்றும் சுவைக்காக இந்தியா சமையலில் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. ஜீரணத்திற்கு உதவுவதுடன், பல மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது. கடைகளில் கிடைக்கும் பெருங்காயத்தூளில் சில சமயம் மைதா போன்ற கலப்படம் இருக்கலாம். வீட்டில் தயாரிப்பதன் மூலம் தூய்மையான, வாசனையான பெருங்காயத்தூளைப் பெறலாம்.

     இதற்கு சந்தையில் எப்போதும் தேவை இருப்பதால், இதை ஒரு சிறு தொழிலாகத் தொடங்கி நல்ல லாபம் ஈட்ட முடியும். இப்போது பெருங்காயத்தூள் தயாரித்தல் மற்றும் விற்பனை போன்றவற்றை விரிவாக காண்போம்.

பெருங்காயத்தூள்

1. மூலப்பொருட்கள் மற்றும் கருவிகள்

     ◆ பெருங்காயம்: இது கட்டி பெருங்காயம் மற்றும் பால் பெருங்காயம் என இரண்டு வகைகளில் கிடைக்கும். தரமான பெருங்காயத்தை தேர்வு செய்வது முக்கியம்.
    ◆ உப்பு: விரும்பினால் உப்பு. இது பெருங்காயத்தை உடைக்கவும், நுண்ணுயிர் வளர்ச்சியை தடுக்கவும் உதவும்.
     ◆ பேக்கிங் இயந்திரம்: தயார் செய்த பெருங்காயத்தூளைப் பாக்கெட்டுகளில் அடைக்க உதவும். ஆரம்பத்தில் கைகளால் பேக் செய்யலாம்.
     ◆ எடை போடும் கருவி: சரியான எடையில் பேக் செய்ய இது முக்கியம்.
     ◆ பேக்கிங் பைகள்/கண்டெய்னர்கள்: விற்பனைக்கு ஏற்ற கவர்ச்சிகரமான பேக்கிங் பொருட்கள்.

2. தயாரிக்கும் முறைகள்

     பெருங்காயத்தைத் தயார்படுத்துதல்:

     கட்டி பெருங்காயம் வெவ்வேறு தடிமன்களில் கிடைக்கும். சில மென்மையாகவும், சில மிகவும் கடினமாகவும் இருக்கும்.

     மென்மையான பெருங்காயம்:

     இதைச் சிறிய, ஒரு இன்ச் அளவு துண்டுகளாக உடைத்துக் கொள்ளுங்கள். கையால் உடைக்க முடிந்தால் அப்படியே செய்யவும்.

     கடினமான பெருங்காயம்:

     இது உடைக்க கடினமாக இருந்தால், ஒரு உரல் மற்றும் உலக்கையை பயன்படுத்தி சிறு துண்டுகளாக இடித்துக் கொள்ளலாம். மிக்ஸியில் நேரடியாக  அரைக்க முயர்சித்தால் பிளேடுகள் சேதமடைய வாய்ப்புள்ளது. மாற்றாக, இரும்பு வாணலியில் மிதமான தீயில் வைத்து, பெருங்காய துண்டுகளை சில நிமிடங்கள் சுடுபடுத்தலாம். சுடுபடுத்தும்போது அவை சற்று மென்மையாகி, உடைக்க எளிதாக இருக்கும். கருகாமல் பார்த்து கொள்ளவும்.

     பெருங்காயத்தை வறுத்தல்:

     ஒரு கடினமான வாணலியை அடுப்பில் வைத்து, மிதமான தீயில் சுடுபடுத்தவும். வாணல் சூடானதும், உடைத்து வைத்திருக்கும் பெருங்காயத் துண்டுகளை சேர்க்கவும். தீயை மிக குறைவாக வைத்து, கரண்டியால் தொடர்ந்து கிளறிக்கொண்டே வறுக்கவும். இது கருகாமல் இருக்க உதவும். பெருங்காயம் மெதுவாக நிரமாற தொடங்கும். லேசான பொன்னிறமாக அல்லது மஞ்சள் நிறமாக மாறி, அதன்மேல் வெள்ளை புள்ளிகள் தோன்றி, ஒரு வித 'பொறிந்த' வாசனை வரும் வரை வறுக்க வேண்டும். பெருங்காயம் நன்கு பொரிந்ததும், அதன் எடை குறைவாகி, மொறுமொருப்பானதாக மாறும், இது சரியாக பொறிந்ததற்கான அறிகுறி. இந்த செயல்முறைக்கு 5-10 நிமிடங்கள் ஆகலாம். சரியான பதத்தில் வருப்பது அதன் மணம் மற்றும் சுவையை மேம்படுத்தும்.
     நன்கு வறுத்ததும், அடுப்பை அணைத்து, பெருங்காயத்தை ஒரு தட்டில் பரப்பி முழுமையாக ஆறவிடவும். சூடாக இருக்கும் போது அரைத்தால் கட்டிப்படும்.

     உப்பு சேர்த்தல் (விரும்பினால்):

     அதே வாணலியில், வறுத்த பெருங்காயத்தை அகற்றிய பிறகு, ஒரு சிட்டிகை உப்பைச் சேர்த்து ஒரு நிமிடம் வறுக்கவும். உப்பு லேசாக சூடானதும், வறுத்த பெருங்காயத் துண்டுகளை மீண்டும் வாணலியில் சேர்த்து, உப்பால் நன்கு கலக்கவும். உப்பு சேர்ப்பது பெருங்காயத்தூள் கெட்டுப்போகாமல் இருக்கவும், அதை அரைக்கும்போது பொடியாக வரவும் உதவும்.

     பொடியாக்குதல்:

     நன்கு ஆறிய பெருங்காயத் துண்டுகளை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்க்கவும். மிக்ஸியை 'பல்ஸ்' மோடில் இயக்கி, சிறிது சிறிதாக அரைக்கத் தொடங்கவும். ஒரே அடியாக அரைக்காமல், நிறுத்தி நிறுத்தி அரைப்பது நல்லது. நைஸாக தூளாக மாறும் வரை அரைக்கவும். சில சமயங்களில் பெருங்காயம் மிக்ஸியில் பிளேடுகளில் ஒட்டலாம். அப்போது ஜாரை அசைத்து விட்டு மீண்டும் அரைக்கலாம். அரைத்த தூளை ஒரு மெல்லிய சல்லடையில் சலித்துக் கொள்ளவும். சல்லடையில் தங்கும் பெரிய துண்டுகளை மீண்டும் மிகஸி ஜாரில் போட்டு நைஸாக அரைக்கவும். இந்த படிநிலை முழு பெருங்காயமும் தூளாகும் வரை செய்யவும்.

3. பேக்கிங்

     பெருங்காயத்தூள் பேக்கிங் அதன் தரம், புத்துணர்ச்சி மற்றும் நீண்ட ஆயுளை உறுதிப்படுத்துகிறது.

     பேக்கிங் பொருட்கள்:

     ◆ காற்று புகாத பாக்கெட்டுகள் (Air-tigh Pouches): ஈரப்பதம் மற்றும் காற்றுப்புகாத அலுமினிய அல்லது பிளாஸ்டிக் பாக்கெட்டுகள் சிறந்தது.
     ◆ நெகிழி குப்பிகள்/டப்பாகள் (plastic Jars/Containers): சிறிய அளவிலான விற்பனைக்கு இவை பொருத்தமானவை.
     ◆ லேபிள்கள்: தயாரிப்பு பெயர், எடை, உற்பத்தி தேதி, காலாவதி தேதி, பொருட்கள் பட்டியல், தயாரிப்பாளர் விவரம் மற்றும் சமையல் குறிப்புகள் போன்றவற்றை தெளிவாக குறிப்பிட வேண்டும்.

     பேக்கிங் செயல்முறை:

     ◆ அளவிடுதல்: சரியான முறையில் பெருங்காயத்தூளை அளந்து பிரித்து  வேண்டும்.
     ◆ பேக்கிங் செய்தல்: அளந்த பெருங்காயத்தூளை தேர்வு செய்யபட்ட பேக்கிங் பொருட்களில் நிரப்ப வேண்டும்.
     ◆ சீல் செய்தல்: பாக்கெட்டுகள் அல்லது குப்பிகளை காற்று புகாதவாறு நன்கு சீல் செய்ய வேண்டும்.
     ◆ லேபிளிங்: ஒவ்வொரு பேக்கிலும் அல்லது குப்பியிலும் லேபிளை ஒட்ட வேண்டும்.

4. விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல்

     பெரும்காயத்தூள் வணிகத்தில் வெற்றி பெற சரியான சந்தைப்படுத்துதல் உத்திகள் அவசியம்.

     இலக்கு சந்தை:

     வீட்டு உபயோகம், உணவகங்கள், மளிகை கடைகள், மசாலா கடைகள், ஆன்லைன் சில்லறை விற்பனையாளர்கள்.

     விற்பனை வழிமுறைகள்:

     ◆ நேரடி விற்பனை: உள்ளூர் கடைகள், சந்தைகள், உணவு கண்காட்சிகள் மூலம் நேரடியாக விற்பனை செய்யலாம்.
     ◆ மொத்த விற்பனை: பெரிய மளிகை கடைகள் மற்றும் மொத்த விற்பனையாளர்களுக்கு பெருமளவு விற்கலாம்.
     ◆ ஆன்லைன் விற்பனை: உங்கள் சொந்த இணையதளம் அல்லது அமேசான், பிளிப்கார்ட் போன்ற ஈ-காமர்ஸ் தளங்கள் மூலம் விற்கலாம்.
     ◆ உணவகங்கள் மற்றும் கேட்டரிங் நிறுவனங்கள்: நேரடியாக ஆர்டர் எடுத்து விநியோகிக்கலாம்.

     சந்தைப்படுத்துதல் உத்திகள்:

     ◆ தரமான தயாரிப்பு: சிறந்த தரமான பெருங்காயத்தூள் உங்கள் வாடிக்கையாளர்களைத் தக்க வைக்கும்.
     ◆ விலை நிர்ணயம்: சந்தை நிலவரம் மற்றும் போட்டியாளர்களைப் பொறுத்து நியாயமான விலை நிர்ணயம் செய்ய வேண்டும்
     ◆ அலங்கார பேக்கிங்: கவர்ச்சிகரமான பேக்கிங் வாடிக்கையாளர்களை ஈர்க்கும்.
     ◆ விளம்பரம்: சமூக ஊடகங்கள், உள்ளூர் செய்திதாள்கள், சமையல் வலைப்பதிவுகள் மூலம் விளம்பரம் செய்யலாம்.
     ◆ சலுகைகள்: பண்டிகை காலங்களில் அல்லது புதிய தயாரிப்பு வெளியீட்டின் போது சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் வழங்கலாம்.
     ◆ மாதிரிகள்: கடைகளிலும் கண்காட்சிகளிலும் சிறிய மாதிரிகளை வழங்கி வாடிக்கையாளர்களை ஈர்க்கலாம்.
     ◆ வாடிக்கையாளர்கள் சேவை: வாடிக்கையாளர்கள் கருத்துகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து நல்ல உறவை வளர்த்துக் கொள்ளுங்கள்.

5. உரிமங்கள் மற்றும் விதிமுறைகள்

     பெருங்காயத்தூள் தயாரிப்பு மற்றும் விற்பனைக்கு சில உரிமங்கள் மற்றும் விதிமுறைகள் தேவைப்படலாம்.
     ◆ FSSAI உரிமம் (Food Safety and Standards Authority of India): உணவுப் பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனைக்கு இது கட்டாயம்.
     ◆ வணிக உரிமம்: உள்ளூர் நகராட்சி அல்லது பஞ்சாயத்திடமிருந்து வணிக உரிமம் பெற வேண்டும்.
     ◆ ஜிஎஸ்டி பதிவு: உங்கள் வணிகத்தின் வருமானத்தை பொறுத்து ஜிஎஸ்டி பதிவு செய்ய வேண்டியிருக்கும்.

     இந்த வழி முறைகளை பின்பற்றி, பெருங்காயத்தூள் வணிகத்தில் நீங்கள் வெற்றியை பெறலாம். தரமான தயாரிப்பு, திறமையான சந்தைப்படுத்துதல் மற்றும் நல்ல வாடிக்கையாளர்கள் சேவை  ஆகியவை இந்த வணிகத்தின் முக்கிய தூண்கள்.
     இந்த சிறு தொழில் வெற்றி பெற என் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்.

👍                               🙏                             👍

கருத்துகள்